Vijay

விஜய்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் நேசிக்கப்படும் ஒரு நபர் என்றால் அது தளபதி விஜய்.

இவரின் சினிமா பயணம் மற்ற நடிகர்களைப் போல் அல்லாமல் மிக கடினமாக அமைந்தது என்று கூறலாம்.

ஆம், பல சறுக்கல்கள், பல அவமானங்கள், பல தோல்விகள், பல போராட்டங்கள் நிறைந்த ஒரு திரை பயணமாகவே தளபதி அவர்களுக்கு இருந்தது.

தளபதி விஜய் பிறந்தநாளான இன்று, அவர் தனது திரை உலகில் எவ்வாறு வெற்றிக்கனியை பரித்தார் என்பதை நாம் இந்த கட்டுரையில் காண்போம்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகம்

1984, ஆம் ஆண்டு விஜய் தனது திரைப்பயணத்தை குழந்தை நட்சத்திரமாக ஆரம்பித்தார்.

அவர் நடித்த முதல் திரைப்படம் வெற்றி. இப்படத்தில் அவர் குழந்தை நட்சத்திரமாக விஜயகாந்த் கேரக்டரில் அறிமுகமானார்.

அதன் பின்னர் வசந்த ராகம், சட்டம் ஒரு இருட்டறை, இது எங்கள் நீதி, நான் சிகப்பு மனிதன் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

ரஜினி, கமல் சாம்ராஜ்யத்தில்

90-களில் ரஜினி, கமல் என்ற சாம்ராஜ்யத்தில் தமிழ் சினிமா நகர்ந்துகொண்டிருந்தது.

அப்போது புரட்சி புயலாய் நாளைய தீர்ப்பு என்கின்ற ஆக்சன் திரைப்படத்தில் தனது திரைப்பயணத்தை தளபதி விஜய் துவங்கினார்.

எதிர்பார்த்த அளவுக்கு நாளைய தீர்ப்பு வெற்றி பெறவில்லை. ஆனால், தளபதி சோர்ந்து போகவில்லை நாளைய தீர்ப்பு திரைப்படத்தில் விஜயின் நடிப்பு அப்போது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

பிரபல பத்திரிக்கை இந்த முகத்தை பார்க்க எதுக்கு தியேட்டருக்கு போகணும் -என்ற கேவலமான விமர்சனத்தை தனது பத்திரிகையில் எழுதி இருந்தது. இது தளபதி விஜய்க்கு மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியது.

விஜயகாந்த்துக்கு தம்பியாக

விஜய்யை பட்டிதொட்டி எங்கும் அழைத்துச் செல்ல அவரது தந்தை எடுத்த அதிரடி முடிவு கேப்டன் விஜயகாந்த். ஆம், செந்தூரப்பாண்டி இந்த படம் 1993 ஆம் ஆண்டு வெளியானது.

இப்படத்தில்  விஜயகாந்த் அவர்களுக்கு தம்பியாக நடித்து இருப்பார். இந்த படம் மாபெரும் வெற்றி பெறவில்லை என்றாலும் விஜய்யைப் பட்டிதொட்டி எங்கும் அழைத்துச் சென்றது.

அதன் பின்னர் ரசிகன், தேவா போன்ற படங்களில்  காதல் மற்றும் ஆக்ஷன் கலந்த கதைகளில் நடித்து வந்தார். இந்த படங்களும் ஓரளவுக்கு சுமாரான வெற்றியைப் பெற்றது.

அஜித்துடன் இணைந்து நடித்த ஒரே படம்

இப்படி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த தளபதி விஜய், அஜித் அவர்களுடன் இணைந்து ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் இரண்டு கதாநாயகர்கள் கதாபாத்திரம் நடித்திருந்தார்.

இந்த படம் அந்த காலகட்டத்தில் மாபெரும் வெற்றி பெறவில்லை. அதன்பின்னர் விஜயும், அஜித்தும் இதுவரை எந்த படத்திலும் ஒன்றாக இணைந்து நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் முதல் வெற்றி பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை

1996-ஆம் ஆண்டு தளபதி விஜய் அவர்களின் திரைப்பயணத்தில் மிக முக்கிய வருடம். இந்த வருடம் தான் தமிழ் திரையுலகில் தனது முதல் வெற்றியை அடைந்த ஆண்டு. அந்த படத்தின் பெயர் பூவே உனக்காக.

ஆம், இயக்குனர் விக்கிரமன் இயக்கத்தில் நடித்த படம். பூவே உனக்காக படத்தில் தனது காதலியின் குடும்பத்தை ஒன்று சேர்க்கும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

பூவே உனக்காக படத்தில் காதலித்து தோல்வி அடையும் கதாபாத்திரத்தில் நடித்து இருந்ததால், அந்த காலகட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் படம் மிகுந்த வரவேற்பு பெற்றது.

பூவே உனக்காக மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து காதல் படங்களில் நடிக்க ஆரம்பித்தார் காதலுக்கு மரியாதை, ஒன்ஸ்மோர், லவ்டுடே, நினைத்தேன் வந்தாய் போன்ற காதல் படங்களிலேயே நடித்து வந்தார்.

தொடர் தோல்வி முற்றுப்புள்ளி வைத்த குஷி

நெஞ்சினிலே, மின்சார கண்ணா, என்றென்றும் காதல், போன்ற படங்கள் மாபெரும் வெற்றியை பெறவில்லை. விஜய்க்கு மீண்டும் ஒரு சறுக்கல்.

இத்தகைய சறுக்கல்களை எப்படி சமாளிப்போம் என்று விஜய் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது மீண்டும் ஒரு சறுக்கலாக வந்த படம்தான் நிலவே வா.

இது, விஜய் மிகவும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தோல்வியடைந்த படம். அதன்பின்னர் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா அவர்களின் இயக்கத்தில் 2000-ஆம் ஆண்டு மிக பிரம்மாண்டமாக வெளிவந்த படம்தான் குஷி.

ஜோதிகா அறிமுகம்

குஷி படத்தில் விஜய் கல்லூரி மாணவராக நடித்திருப்பார். ஜோடியாக ஜோதிகா நடித்து இருப்பார். குஷி திரைப்படம் அப்போது இளைஞர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதுவரை மிடில் கிளாஸ் ரசிகர்களை மட்டுமே வைத்திருந்த விஜய் குஷி படத்திற்கு பிறகு ஹை-கிளாஸ் ரசிகர்களையும் தன்வசம் கொண்டு வந்தார். குஷி படத்தை இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா மூன்று மொழிகளில் இயக்கினார்.

முதல் ஹாட்ரிக் வெற்றிபெற்ற விஜய்

குஷி படத்திற்கு பிறகு விஜய் பிரியமானவளே, பிரண்ட்ஸ், பத்ரி என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வெள்ளிவிழா நாயகன் என்ற அந்தஸ்தை பெற்றார்.

இதற்கு பிறகு நடித்த படங்கள் அனைத்துமே தோல்விப் படங்களாகவே அமைந்தது. ஆம், 2002-ஆம் ஆண்டு வெளியான ஷாஜகான், தமிழன், யூத், பகவதி, புதிய கீதை, வசீகரா என படங்களில் நடித்து இருந்தாலும் இவை அனைத்துமே தோல்விப் படங்களாகவே அமைந்தது.

ஓரளவிற்கு யூத் மற்றும் பகவதி வசூலில் குறைவைக்கவில்லை. மற்ற அனைத்து படங்களுமே தளபதி விஜய்க்கு மிகப் பெரிய தோல்விப் படமாகவே அமைந்தது.

திருப்புமுனையை ஏற்படுத்திய திருமலை

2003-ஆம் ஆண்டு தீபாவளிக்கு பல முனை போட்டியுடன் வெளிவந்து விஜய்க்கு மீண்டும் ஸ்டார் அந்தஸ்தை பெற்றுக்கொடுத்த படம் என்றால் அது திருமலை தான்.

ஆம், விக்ரம் நடித்த பிதாமகன், அஜித்குமார் நடித்த ஆஞ்சநேயா, போன்ற படங்களுடன் கடும் போட்டியுடன் வெளிவந்த திருமலை வெற்றி வாகை சூடியது.

அந்த ஆண்டு வெளியான படங்களிலேயே அதிக வசூலை ஈட்டி மீண்டும் வசூலில் ஒரு புதிய மைல் கல்லை விஜய் எட்டினார்.

மேலும் திருமலை படத்தில் தான் ஒரு முழு ஆக்சன் ஹீரோவாக முதன்முதலில் நடித்து வெற்றி பெற்றார். அதன் பின்பு சொல்ல தேவையில்லை,

சொல்லி அடித்த கில்லி

தரணி இயக்கத்தில் 2004-ஆம் ஆண்டு வெளியான படம் கில்லி. இப்படத்தில் விஜய் கபடி வீரராக நடித்திருப்பார்.

விஜய்க்கு ஜோடியாக திரிஷா, வில்லனாக பிரகாஷ்ராஜ் நடித்திருப்பார். இப்படத்தில் விஜய் துறுதுறுவென இளைஞராக நடிப்பில் அசத்தி இருப்பார்.

குறிப்பாக அப்படி போடு என்ற பாடல் அந்தக் காலகட்டத்தில் அனைத்து இளசுகளின் மனதிலும் தாளம் போட்டது.

இப்படத்தின் வசூல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படையப்பா படத்தின் வசூலை முறியடித்தது என்பது வரலாறு.

தங்கச்சி சென்டிமென்டில் கலக்கிய திருப்பாச்சி

கில்லி படத்திற்கு பிறகு விஜய் நடித்த மதுர, திரைப்படம் ஓரளவிற்கு வசூலில் எந்த குறையும் வைக்கவில்லை. ஆனால், கில்லி படத்தின் வசூலை தூக்கி சாப்பிடும் அளவிற்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த படம் தான் திருப்பாச்சி.

அண்ணன் தங்கச்சி சென்டிமென்ட் மையமாக வைத்து புதுமுக இயக்குனர் பேரரசு இயக்கத்தில் பொங்கலன்று வெளியான திருப்பாச்சி வசூலில் ஒரு புதிய சாதனையைப் படைத்தது.

அதுமட்டுமின்றி விஜய்க்கு தமிழ் சினிமாவில் நிரந்தர இடத்தையும் இந்த திரைப்படம் தான் அமைத்துக் கொடுத்தது. பின்பு வெளியான சிவகாசி, ஆதி போன்ற படங்கள் சுமாராக வெற்றி பெற்றாலும் விஜய்க்கு ஒரு மிகப்பெரிய வெற்றி தேவைப்பட்டது.

வெள்ளி விழா கண்ட போக்கிரி

இதற்காக விஜய் சுமார் 1 ஆண்டுகளாக எந்தவித படங்களில் நடிக்காமல் காத்திருந்தார். அப்போதுதான் இயக்குனர், நடன இயக்குனருமான பிரபுதேவா இயக்கத்தில் போக்கிரி என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார்.

இந்த திரைப்படம் வசூலில் ஒரு புதிய சாதனையைப் படைத்தது குறிப்பாக சென்னையில் உள்ள லட்சுமி திரையரங்கில் இத்திரைப்படம் இரண்டாவது முறையாக அதாவது வெள்ளி விழா கண்ட படம் மீண்டும் திரையிடப்பட்டு 100 நாட்கள் ஓடி மிகப்பெரிய சாதனையை செய்தது.

இந்த விழாவிற்கு நேரிலே வந்து கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்முறையாக இரட்டை வேடத்தில்

போக்கிரி படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்த திரைப்படம் அழகிய தமிழ் மகன்.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்திருப்பார். இந்த படத்தின் கதை என்னவென்றால் பின்பு நடக்க இருக்கும் நிகழ்வை முன்கூட்டியே தெரிந்து அதனை தடுக்கும் ஒரு குணமுடைய மனிதராக இருப்பார்.

ஆனால், இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெறவில்லை இது ஒரு தோல்விப் படமாக அமைந்தது. இதனை அடுத்து வெளியான குருவி, வேட்டைக்காரன், சுறா போன்ற படங்கள் படுதோல்வி அடைந்து சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை இழக்க நேரிட்டது.

ஆரவாரமின்றி வெளியாகி வெற்றிபெற்ற காவலன்

மீண்டும் தளபதி விஜய்க்கு ஒரு வெற்றி படம் தேவைப்பட்டது. அப்போது வெளிவந்த திரைப்படம் தான் காவலன். இது விஜய்க்கு மீண்டும் திரையுலகில் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது.

ஆனால் இது வசூலில் சொல்லிக் அளவிற்கு மிகப்பெரிய வெற்றியை பெறவில்லை. இருந்தாலும் விஜய் மனம் தளராமல் தனது அடுத்த படமான வேலாயுதம் என்ற படத்தின் மூலம் வசூலில் தன்னால் மீண்டும் ஒரு வெற்றிப் படத்தைக் கொடுக்க முடியும் என்பதை நிரூபித்தார்.

அந்த காலகட்டத்தில் வேலாயுதத்துடன் மிக பிரம்மாண்ட பொருட்செலவில் வெளியான படம் தான் ஏழாம் அறிவு. ஏழாம் அறிவிற்கும் வேலாயுதம் கடும் போட்டி நிலவிய நிலையில் வேலாயுதமே மாபெரும் வெற்றி பெற்றது.

நண்பன், துப்பாக்கி என 100 கோடி கிளப்பில்

அதன்பின்பு தளபதி விஜய் நண்பன், துப்பாக்கி என தொடர்ந்து வெற்றிப்படங்களை நடித்தார். அதிலும் துப்பாக்கி விஜய்க்கு 100 கோடி கிளப்பில் இணையும் அந்தஸ்தை கொடுத்தது. இந்த படத்தில் சமூக விரோதிகளை அடித்து நொறுக்கும் ஒரு ராணுவ அதிகாரியாக நடித்திருப்பார்.

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெளியான இந்த திரைப்படம் 2012-ஆம் ஆண்டு வெளியான படங்களிலேயே அதிக வசூலை ஈட்டியது மட்டுமின்றி 100 கோடி என்ற புதிய மைல் கல்லை எட்டியது.

தலைவலி தந்த தலைவா

தலைவா இந்த டைட்டில் வைத்த நாளிலிருந்தே இந்த படத்திற்கு தலைவலி ஆரம்பித்தது என்று தான் சொல்லவேண்டும். தலைவா திரைப்படம் வெளிவருவதற்கு பல போராட்டங்கள் பல வன்முறை நடந்தது என்றே சொல்லலாம்.

திரைப்படத்தை வெளியிட அக்காலத்திலிருந்த இருந்த அரசு மறைமுகமாக அழுத்தத்தை தந்தது என்று கூறப்பட்டது. இதன் விளைவு, இப்படம் வெளியாக வேண்டிய தேதியில் தமிழகத்தில் வெளியாகவில்லை.

ஆனால் இந்தியாவின் மற்ற பகுதிகளில் வெளியாகி தோல்வியை சந்தித்தது.

அட்லி மற்றும் முருகதாஸ் படத்தில் மட்டும் 

முருகதாசுடன், விஜய் இணைந்த படம் கத்தி. இத்திரைப்படம் 2014-ஆம் ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வந்தது. இப்படத்தில் விவசாயிகளின் தற்போதைய நிலை மற்றும் கார்ப்ரேட் நிறுவனங்களில் அடாவடித்தனம் போன்ற சமூக அக்கறைகளை வெளிப்படுத்தும் படமாக கத்தி அமைந்தது.

பின்னர் வெளியான புலி படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதன் பின்னர் அட்லி உடன் இணைந்து விஜய் நடிப்பில் வெளியான படம் தெறி இத்திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார்.

அவருக்கு ஜோடியாக சமந்தா நடித்து இருப்பார். இத்திரைப்படமும் விஜய்க்கு மாபெரும் வெற்றி பெற்று தந்தது. அதன் பின்னர் வெளியான மெர்சல், சர்க்கார் என தொடர்ந்து அட்லி, முருகதாஸ் என இருவரின் இயக்கத்தில் நடித்தார்.

தற்போது, பெயரிடப்படாத ஒரு படத்தில் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். இத்திரைப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை என்றாலும் ரசிகர்கள் இத்திரைப்படத்தை தளபதி63 என்று அன்புடன் அழைத்து வருகிறார்கள்.

விஜய்க்கு ரத்தத்தின் ரத்தமான ரசிகர்கள்

விஜயின் இந்த திரைப்பயணத்தில் பல சறுக்கல்கள் பல வெற்றிகள் இருந்தாலும் விஜய் இந்த அனைத்து பிரச்சனைகளையும் தனியாக சந்திக்க வில்லை, அவருக்கு உறுதுணையாக அவரது இன்னொரு கண்ணாக அவரது ரசிகர்கள் என்றும் இருந்து அவரை காத்து வருகிறார்கள்.

தளபதி விஜய்க்கு ரசிகர்கள் மிகப்பெரிய பலமாக இருந்து வருகிறார்கள், விஜய்யும் தனது ரசிகர்களை கவனிப்பது மட்டுமின்றி அவர்களின் இன்ப துன்பங்களில் எப்பொழுதுமே கலந்து வருகிறார்.

Exit mobile version